தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை த்ரிஷா, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனது திரைப்பயணத்தில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். ரசிகர்களின் மனதில் ஃபேவரட் ஹீரோயினாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நடிகை த்ரிஷா நடிக்கும் அடுத்தடுத்து பெரிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து ராம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் அரவிந்த்சாமி உடன் சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்துள்ள த்ரிஷா, நாயகியாக நடித்துள்ள கர்ஜனை மற்றும் ராங்கி ஆகிய படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. அடுத்ததாக நேரடியாக தெலுங்கில் தயாராகும் புதிய வெப்சீரிஸான பிருந்தா வெப்சீரிஸிலும் த்ரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகை த்ரிஷா சில தினங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்து உள்ளதாக த்ரிஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

இதுவரை நெகட்டிவ் என்ற வார்த்தையை படித்து இவ்வளவு சந்தோசம் அடைந்ததில்லை… அனைவரின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி… உனக்காக நான் தயாராகிவிட்டேன் 2022 

என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.