“பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிப்பில் ஏற்பட்ட குளறுபடியில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியின் சதி இருப்பதாக” பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எது பேசினாலும், அது சர்ச்சையாக மாறும். அல்லது அவரது பேச்சுக்கள் வைரலாகும். அப்படிதான் தற்போது அவர் பிரதமர் பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசிய கருத்துக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது, காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன. 

இந்த நிலையில் தான், அங்கு  42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க இருந்த நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக கடந்த 5 ஆம் தேதி பிரதமர் மோடி, பஞ்சாப் சென்றார்.

அப்போது, பிரதமர் பெரோஸ்பூர் மாவட்டம் உசைனிவாலாவில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடாகி இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பயண திட்டம் அதிரடியாக உடனே மாற்றப்பட்டது. 

அதன்படி, அவர் சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது. ஆனால், வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், பிரதமரின் கார் பாதிலிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 

சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தும், அந்த போராட்டம் முடிவுக்கு வராத காரணத்தால், பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பிச் சென்றார். அவரது நிகழ்ச்சிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. இந்த விவகாரம் தான், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.

அத்துடன், பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் அரசு, மத்திய அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
மேலும், பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட தீவிரமான பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங் முறையிட்டு வருகிறார். 

இது ஒரு புறம் இருக்க, இதனை வைத்து, பலரும் பல விதமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளதாக”  தெரிவித்துள்ளார்.

“பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது என்றும், இது திட்டமிட்ட சதி” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

மேலும், “இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி இருக்கிறது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.