“திருநங்கைகளின் ஆடைகளை களைந்து பாலின சோதனை மேற்கொண்டதாக” திரிபுரா போலீசார் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுராவில் கடந்த 8 ஆம் தேதி சனிக் கிழமை அன்று இரவு 4 திருநங்கைகள், அங்குள்ள ஒரு ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி முடித்து விட்டு வெளியே வந்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக சென்றவர்களிடம் அவர்கள் மிரட்டி பணம் பறித்ததாக புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டின் பேரில், திருநங்கைகளான அந்த 4 பேரையும் மேற்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். 

அந்த காவல் நிலையத்தில் ஆண் மற்றும் பெண் போலீஸார் சேர்ந்து அந்த 4 திருநங்கைகளின் பாலினத்தை அறிவதற்காக, அவர்களின் ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், “இனி, கிராஸ் டிரஸ் அணிந்துகொண்டு அந்த நகரில் சுற்ற மாட்டோம் என்றும், அவ்வாறு கிராஸ் டிரஸ் அணிந்து நாங்கள் ஊர் சுற்றினால் எங்களை கைது செய்யலாம்” என்றும், அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, திருநங்கைகள் காவல் நிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், “போலீசர் எந்த ஆதாரமும் இல்லாமல் மிரட்டி பணம் பறித்ததாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக” பாதிக்கப்பட்ட திருநங்கைகளும் செய்தியாளர்களை அழைத்து, குற்றம்சாட்டினர். 

“நாங்கள் அப்படி யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை என்றும், அது முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டு” என்றும், பாதிக்கப்பட்ட திருநங்கைகள் விளக்கம் அளித்தனர்.

இந்த விவகாரம், அந்த மாநிலத்தில் பூதகாரமாக வெடித்த நிலையில், “இந்த சம்பவம் குறித்து அறிக்கை கோரப்பட்டு உள்ளதாகவும், அதன் படி தவறிழைத்தவர்கள் மீது துறை ரீதியாக தண்டிக்கப்படுவார்கள்” என்றும், திரிபுரா காவல் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இச்சம்வம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.