பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திரபாலாஜி. இவர், ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. 

இதனால், அவரது உதவியாளரிடமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாகவும், இவற்றுடன் கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், இந்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் 15 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தத் தொடங்கினர்.

அதன்படி, பண மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் திடீரென்று தலைமறைவானார். அதன் தொடர்ச்சியாகவே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட்டது. 

அதன்படியே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கார் மாறி மாறி தப்பித்துச் சென்ற போது, அதிரடியாக தனிப்படை போலீஸாரால்  கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட அவரை தனிப்படை போலீசார் மறுநாளே தமிழகம் அழைத்து வந்தனர். 

அதன் பிறகு, ராஜேந்திரபாலாஜி விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ராஜேந்திரபாலாஜி விசாரணைக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லபட்டார்.

பின்னர், அவர் விசாரணைக்குப் பிறகு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். 

இதையடுத்து, வரும் 20 ஆம் தேதி வரை ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி, ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது. 

அதன் படி, அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், அவர் “தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றும், நிபந்தனைகள் விதித்து உள்ளனர்.

மேலும், “ராஜேந்திர பாலாஜி வெளியூர் செல்லக்கூடாது” உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.