தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகரான நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக அறிமுகமான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

முன்னதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய குறும்படம் விடியலை நோக்கி சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது பெற்றது. தேசிய விருதைப் பெற்ற முதல் தமிழ் குறும்படம் விடியலை நோக்கி என்பது குறிப்பிடத்தக்கது. பானா காத்தாடி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதர்வா முரளி உடன் இணைந்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் செம போத ஆகாதே படத்தை இயக்கினார்.

தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிகர் ரியோ ராஜ் மற்றும் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. சைக்கலாஜிக்கல் ஹாரர் திரைப்படமாக தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், தனது தயாரிப்பு நிறுவனமான பத்ரி வெங்கடேஷ் டேல்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடிக்கிறார். 

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்,  விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல நடிகர் நடிகைகளோடு தொடங்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு சைமன்.கே.கிங் இசையமைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்ரி வெங்கடேஷ் நடித்துள்ள புதிய டீசரையும் வெளியிட்டுள்ளார். அந்த டீசர் இதோ…