தமிழக சட்டப் பேரவையில் முதல் முறையாக கேள்வி- பதில் நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அம்மா உணவகம் குறித்து திமுக - அதிமுக இடையே பேரவையில் நடைபெற்ற காரசார விவாதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி, 2 வது நாளான இன்றைய தினம் கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கியது. இன்றைய சட்டசபை கூட்டத்தில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டசபையில் “கேள்வி - பதில் நேரத்தை” நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. 

அதன்படி,  தமிழக சட்டசபையானது இன்று முதல் தனது நேரடி ஒளிப்பரப்பை தொடங்கியதால், பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட அம்மா உணவகத்தில் பணியாளர்களை குறைப்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அதாவது, இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து “அம்மா இருசக்கர வாகன மானியம் கிடைக்காமல் இருப்போர், அம்மா உணவகத்தில் நடக்கும் பணியாளர்கள் குறைப்பு, அம்மா மினி கிளினிக் மூடல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து” சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். 

அத்துடன், “கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் அம்மா இரு சக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு இன்னமும் மானியம் போய் சேரவில்லை என்றும், அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும், அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது என்றும், அதற்கு எங்களது கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்” என்றும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்தார். 

அப்போது, தனது இறுக்கையில் இருந்து எழுந்து குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன்,  “அம்மா உணவத்தை மூடினால் தான் என்ன?” என்று, அசரடிக்கும் வகையில் கேள்வி எழுப்பினார்.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் கலைஞர் பெயரிலான எத்தனை திட்டங்களை மூடினீர்கள்?” என்று, காட்டமாகவும் பதில் அளித்தார். 

அத்துடன், அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட திட்டங்களை ஆவேசமாகவும் அவர் பட்டியலிட்டார். 

அந்த நேரத்தில், குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர், “அம்மா உணவகத்தை மூடினால், அதற்கான பாவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்” என்றார் காட்டமாகவே எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.

இந்த பதிலைக் கேட்டவுடன் ஆவேமாக குறுக்கிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் ஆட்சியில் நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை எல்லாவற்றையும் நீங்கள் மூடியதால் தான், இப்போது நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள்” என்றார் காட்டமாகவே கடுமையாக சாடினார்.

இதே போல், இன்றைய தினம் பல்வேறு விசயங்கள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.