தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்திலும், இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் டிஜே அருணாச்சலம் உடன் இணைந்து பத்து தல படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான மாநாடு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. நடிகர் சிலம்பரசனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

சிலம்பரசனுக்கான சிறந்த கம்பேக் திரைப்படமாக அமைந்த மாநாடு திரைப்படத்தின் மிரட்டலான வில்லனாக SJ.சூர்யா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், பிரவீன்.K.L.-ன் படத்தொகுப்பும் மாநாடு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்த மாநாடு திரைப்படம் பல்வேறு தடைகளையும் தாண்டி ரசிகர்களை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் மாநாடு படத்தின் ரீமேக் குறித்த ருசிகர தகவல் தற்போது வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்த இந்திய மொழிகளுக்கான மாநாடு திரைப்படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ரீமேக் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.