தமிழக சட்டப் பேரவையில் முதல் முறையாக “கேள்வி- பதில் நேரம்” நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கில் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம், நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழகத்தின் புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரை ஆற்றினார்.

அப்போது, “வணக்கம்” என்று, தமிழில் பேசிய தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு சட்டப்பேரவை மிகப்பெரிய பாரம்பரியங்களைக் கொண்டது” என்று, பெருமையோடு குறிப்பிட்டு, தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களிலும் பாராட்டுத் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்குப் பிறகு, தமிழக அரசின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அவையை 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன் படியே இன்றைய தினம் கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன், மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட்டுட்டு மறைவுக்கும்ம், தமிழக பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இன்றைய சட்டசபை கூட்டத்தில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டசபையில் “கேள்வி - பதில் நேரத்தை” நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. 

அதன்படி,  தமிழக சட்டசபையானது இன்று முதல் தனது நேரடி ஒளிப்பரப்பை தொடங்கி உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளித்து வருகிறார்கள். இதனை, பொது மக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்த்து வருகின்றனர்.

இதனால், தமிழக அரசின் இந்த செயல்பாடு, இந்திய அரசியலில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.