“தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார் என்றும், இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது” என்றும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம், நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழகத்தின் புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரை ஆற்றினார்.

அதன் தொடர்ச்சியாக, சட்டமன்றத்தின் 2 வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. 

இந்த நிலையில் தான், தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டசபையில் “கேள்வி - பதில் நேரத்தை” நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அதன்படி,  தமிழக சட்டசபையானது இன்று முதல் தனது நேரடி ஒளிப்பரப்பை தொடங்கி உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளித்து வருகிறார்கள். இதனை, பொது மக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்த்து வருகின்றனர்.

அதன்படி, இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியபோது, முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். 

அப்போது, “மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது என்றும், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது என்றும்”  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். 

பின்னர், “அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா?” என்று, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று, கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு பெற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் பேசினார். 

அதன்படி, “எந்தவொரு நுழைவுத் தேர்வும் ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் என்றும், நீட் தேர்வு வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதாகவும்” கவலைத் தெரிவித்தார்.

“நீட் தேர்வு மாணவர்களின் கல்விக்கனவை சிதைப்பதாகவும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும்” முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, ““பள்ளிக் கல்வி முறையை மத்திய அரசு அர்த்தமற்றதாக்கிவிட்டது” என்றும், சட்டமன்றத்தில் முதலவர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், “நீட் விலக்கு மசோதா குறித்து டி.ஆர்.பாலு தலைமையில் உள்துறை அமைச்சகத்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர் என்றும், ஆனால் தமிழ்நாடு எம்.பி.க்களை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்தது, மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது” என்றும், முதலமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், “நீண்ட நெடிய அரசியல், சட்டம் மற்றும் மக்கள் போராட்டத்திற்கு பின்னரே சமூக நீதி போராட்டத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளதாக” குறிப்பிட்ட முதலமைச்சர், “நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் எனக்கருதி முன்னெடுத்து செல்வோம்” என்றும், சூளுரைத்தார்.

முக்கியமாக, “நீட் தேர்வு விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்” என்றும், தமிகழ சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.