தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தொடர்ந்து தற்போது பாலிவுட் & ஹாலிவுட் திரைப்படங்களிலும் அசத்தி வருகிறார்.  கடந்த ஆண்டின் இறுதியில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி ஒட்டு மொத்த ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை அடித்தார்

முன்னதாக இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தயாராகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சமந்தா தொடர்ந்து முதல்முறையாக ஹாலிவுட்டில் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

அடுத்ததாக சமந்தா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் யசோதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் ஐந்து மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புதுவித த்ரில்லர் படமாக ஸ்ரீ தேவி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் யசோதா படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இணைந்து இயக்குகின்றனர். M.சுகுமார் ஒளிப்பதிவில் மணிசர்மா இசையமைக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட யசோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.