தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக பல திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் ஆரி, விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி தமிழக ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

முன்னதாக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரி.

மேலும் அலேக்கா மற்றும் பகவான் ஆகிய திரைப்படங்கள் இவரது நடிப்பில் தயாராகி வெளிவரவுள்ள நிலையில், நடிகர் ஆரி அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. SAS புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யோகராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் மணி வர்மன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் இத்திரைப்படத்தில் நடிகை அஞ்சு குரியன் கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் ஈரோடு மகேஷ், மனோபாலா மற்றும் ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். K.G.ரதீஷ் ஒளிப்பதிவில், ஸ்ரீசாய் தேவ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் விவேக் பாடல்களை எழுதுகின்றனர். சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்கிறார். 

இந்நிலையில் இன்று (ஜனவரி 5 ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.