“தமிழ்நாட்டில் மிக பயங்கர பிரளயம் வரப்போகிறது” என்று, கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்திய பெண் சாமியார் காளிமாதா தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு கடந்த காலங்களில் சுனாமி, புயல், கனமழை, கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கொரோனா போன்ற கொடிய நோய்கள் உள்ளிட்ட பலவிதமான இயற்கை சீற்றங்களைப் பார்த்திருக்கிறது.

இந்த நிலையில் தான், தமிழகத்தைச் சேர்ந்த பெண் சாமியார் ஒருவர், “வாய்க்கு வந்ததை எல்லாம் உலறிக்கொண்டு வருகிறார்” என்று, கடந்த சில மாதங்களாக கடுமையாக  விமர்சிக்கப்பட்டு வந்தார். 

அதுவும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சாமியார், பேசிய பிரளயம் பற்றிய செய்தியை, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கூட்டமே அப்போது விவாதித்துக்கொண்டு வந்தது.

அதாவது, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா காளி மாதா என்ற பெண், அந்த பகுதியில் புகழ் பெற்ற பெண் சாமியாராக திகழ்ந்து வந்தார்.

இந்த பெண் சாமியார், சமீபத்தில் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். 

அப்போது, சொகுசு காரில் வந்த அந்த பெண் சாமியார், தனது முகத்தில் சாயம் பூசிகொண்டும், உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டும், கழுத்தில் நிறைய தங்க நகைகளை அணிந்துக்கொண்டும், தலைமுடியிலும் சாயம் அடித்திருந்த நிலையில் ஜிகுஜிகுவென்று சென்றிருக்கிறார்.

அத்துடன், திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் இருக்கும் காளி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, கிரிவலம் சென்ற அந்த பெண் சாமியார், அந்த கோயிலுக்கு வந்த சக பக்தர்களுக்கு குங்குமிட்டு தனது ஆசியை வழங்கினார்.

அப்போது, பக்தர்கள் முன்பு பேசிய அந்த பெண் சாமியார், “சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது என்றும், அது முதல் காளிமாதா வழிபாட்டில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்” என்றும், குறிப்பிட்டார்.

“இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன் என்றும், உலகில் அதர்மம் தலைதூக்கும் போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார்” என்றும் கூறிய அந்த பெண் சாமியார், “உண்ணாமலை அம்மன் போல் காளியும் - சிவனுக்கு மிகவும் விருப்பமானவள்” என்றும், தெரிவித்தார்.

குறிப்பாக, “தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும் என்றும், அதன் பிறகு அமைதியான சூழ்நிலை உருவாகும்” என்றும், கூறி அந்த பெண் சாமியார் பெரும் பீதியை கிளப்பினார். 

பெண் சாமியாரின் இந்த வார்த்தையை கேட்டு, அங்கு கூடியிருந்த சக பக்தர்கள் அப்படியே திகைத்துப் போன நிலையில், அந்த பெண் சாமியார் பேசியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் போட்டோ எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர். இதனால், இந்த செய்தி பெரும் வைரலானது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம், தவயோகி என்ற சாமியார் தன்னிடம் 11 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டாதாகவும், 35 பவுன் தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் அவர், குற்றம்சாட்டி புகார் அளித்தார். 

முக்கியமாக, அவரது ஆசிரமத்தில் புலித்தோல் இருப்பதாகவும் போலீசாருக்கு பவிதா புகார் அளித்தார்.

போலீசாரின் இந்த விசாரணையில் தவயோகி தலைமறைவாகிவிட்ட நிலையில், தவயோகியிடம் ஏற்கனவே பெற்றிருந்த பவ ஆப் அட்டர்னி உரிமையின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த ஆசிரமத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார் இந்த பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா .

இதனைத் தெரிந்துக்கொண்டு, பவர் ஆப் அட்டார்னி அதிகாரத்தை ரத்து செய்து, போலீசில் புகார் அளித்திருக்கிறார் தவயோகி. 

மேலும், “தன்னிடமிருந்து 35 பவுன் நகை நிலம் வாங்கித் தருவதாகச் சொல்லி வாங்கப்பட்ட 11 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகவும் அவர் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வழக்குகளில் கீழ் பெண் சாமியார் பவித்ராவை என்கிற காளிமாதாவை தேடி வந்தனர். 

இந்த நிலையில் தான், திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெருவில் வசித்து வரும் அவருடைய வீட்டில் பதுங்கியிருந்த பெண் சாமியார் காளி மாதாவையும், அவரது உதவியாளர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பெண் சாமியார் பவித்ரா என்கிற காளிமாதா “சிபிஐ அதிகாரி என்று பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்ததும்” தெரிய வந்தது.

குறிப்பாக, இவரிடம் விசாரணை நடத்தியபோது, “நாள் காளியின் மறு உருவம்” என்று கூறிவிட்டு இவர் சாமி ஆடியதால், போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, இவர் நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.