தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

online gaming

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணம், நகைகளை பலர் இழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதில் சிலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 3 நாட்களில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக 2 தற்கொலைகளும் ஒரு கொள்ளை சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாள் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தற்போது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசும்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் படித்தவர்கள், வங்கி அதிகாரிகள் என பலர் தற்கொலைக்கு ஆளாவதாக பல செய்திகள் வருகின்றன. சமீபத்தில் கூட சென்னையில் வங்கி அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு எடுக்கும் என தெரிவித்தார்.