தமிழ் திரை உலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் ஹரீஷ் கல்யாண். கடைசியாக ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த ஓ மணப்பெண்ணே திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் கடந்த அக்டோபரில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அடுத்ததாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படத்தை GV பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.

இதனைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் பகிர்ந்துகொண்டார். அந்த பதிவில், “இயக்குனர் சசி இயக்கத்தில் படம் விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளிவரும்... கோலிவுட்டிற்கு உன்னை வரவேற்கிறேன் இனிமையான பெண் சித்தி இத்நானி” என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை சித்தி இத்நானி, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.