தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் துவங்கி மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கிவிட்டது. அதேபோல் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கிவிட்டது. 

கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதி அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி தமிழகத்தை மழை வெள்ளம் நிலைகுலைய வைத்தது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் கனமழையால் தத்தளித்தன.

chennai rain chennai imd

அதிலும் சென்னையில் திடீரென கடந்த மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை மாலை முதல் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை தொடர்ந்து 13 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழையால் சென்னை வெள்ளநீரில் சிக்கித் தவித்தது.

சாலைகள், சுரங்கப் பாதைகள், குடியிருப்பு பகுதிகள், தாழ்வான பகுதிகள் என எங்கெங்கும் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மக்கள் உணவின்றி, தங்க இடமின்றி தவித்தனர். 
உடனடியாக மீட்புப் பணிகள் முடக்கிவிடப்பட்டு வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் மின்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. 

கடந்த வாரத்திற்கு முன்பு வரை மழை விடாமல் பெய்து வந்தது. 
கடந்த 2-3 நாட்களாக மழை குறைந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வரும் 17 ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. 

Chennai IMD rain weather update

இதனால் வடகிழக்கு பருவக்காற்று வேகமாக வீசும். காற்றின் வேகம் 50 கிமீ வரை செல்ல கூடிய வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். அதேபோல் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 19 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் வடமாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.