இரண்டு வயது குழந்தையை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் அந்த குழந்தை சிகிச்சை பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சபரிநாத் - தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் அயனாஸ் என்ற ஆண் குழந்தை உள்ளான்.  இந்நிலையில் குழந்தையின் தாத்தா சேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள கோல்டன் பீச் பூங்காவிற்கு பேரனை அழைத்துச் சென்றுள்ளார். 

இந்த பூங்காவில் மாலை நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படும் நிலையில், பேரன் அயனாஸை அவரது தாத்தா சேகர் என்பவர் அப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பேரன் தண்ணீர் கேட்வே, பேரனை பூங்காவின் தரையில் விளையாட விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்காக சென்றுள்ளார். 

child street dogsஅப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 தெருநாய்கள் ஒன்று சேர்ந்து, குழந்தையின் தாத்தா தண்ணீர் பாட்டிலை எடுத்து வருவதற்குள் குழந்தை அயனாஸ்யை கொடூரமாக தாக்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சேர்ந்து தெருநாய்களை விரட்டிவிட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குழந்தை அயனாஸை மீட்டுள்ளனர். 

பின்னர் உடனடியாக என்.எல்.சி அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  பிறகு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

தெருநாய்கள் கடித்து குதறியதில் ஏற்பட்ட காயங்களால் குழந்தைக்கு உடல் முழுவதும் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட தையல்கள் இதுவரை போடப்பட்டுள்ளன. குழந்தை சிகிச்சை பெற்று வரும் இந்நிலையில் குழந்தையின் தாய் சமூக வலைதளங்களில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவொன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார். 

அதில் “குழந்தையை பூங்காக்கள் மற்றும் சாலை ஓரங்களில் தனியாக விடவேண்டாம். பூங்கா போன்ற பொது இடங்களில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது தனியாக விட வேண்டாம்.
இதுபோன்ற சோகம் எந்த குழந்தைக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. தெருநாய்களை மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்படுத்த வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்தாயின் உருக்கமான வேண்டுகோளும் குழந்தையின் நிலையும் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. வீடியோவில் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் தாய் கூறியதுபோன்றே, அப்பகுதியை சேர்ந்த மக்களும் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.

child street dogsஇந்நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தெரு நாய்கள் மட்டுமில்லை. பிற விலங்குகள் தெருவில் இருப்பதாலும் நிறைய ஆபத்துகள் ஏற்படுகிறது. 
இதையெல்லாம் தடுக்க நாம் அதை தத்தெடுக்க வேண்டியது தற்போது அவசியமாக இருக்கிறது.

அப்படி இருந்தால் அவை ஆக்ரோஷமாக மாறாது. இதை பொதுமக்களும் உணர வேண்டும்.
நாய் கடித்துவிட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக அந்த நாயை அடித்து கொள்ள வேண்டும் என நினைக்க கூடாது. இது இன்னும் ஆபத்தாக மாறிவிடும். 

அதேபோல் ரேபிஸ் ஊசி போடுவதற்கு மாவட்ட வாரியாக அதற்கான பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. மாவட்ட கால்நடை மருத்துவமனையில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றது” என தெரிவித்தார். குழந்தையை தெருநாய்கள் கடித்த சம்பவம் கேட்பவர்களை பதற வைத்துள்ளது.