தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், டி.ராஜேந்திரன், இளைய திலகம் பிரபு, மோகன், விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ள நடிகை அமலா தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த நடிகை அமலா, கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கில் மனம் திரைப்படத்தில் நடித்தார்.

கடைசியாக தமிழில் 1991 கற்பூரமுல்லை திரைப்படத்தில் நடித்த அமலா தற்போது கணம் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தெலுங்கில் ஓகே ஒக்க ஜீவிதம் என்ற பெயரிலும் தமிழில் கணம் என்ற பெயரிலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ள கணம் படத்தை இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். 

நடிகர் சர்வானந்த் கதாநாயகனாகவும் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாகவும் நடிக்க, நடிகர்கள் நாசர்,ரமேஷ் திலக் மற்றும் சதீஷ் உடன் இணைந்து நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கணம் திரைப்படத்தின் டீசர் நேற்று டிசம்பர் 21-ம் தேதி வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் கணம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை அமலா, 

“வணக்கம், இத்திரைப்படத்தில் அனைவருக்கும் அம்மாவாகிவிட்டேன் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்கின் திரைப்படத்தில் அம்மாவாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. இந்தக் கதையை என்னிடம் சொன்ன பொழுதே இந்த கதாபாத்திரத்தை நான் செய்வேன் என முடிவெடுத்துவிட்டேன். இத்திரைப்படத்திற்கு பிறகும் அடுத்து திரைப்படங்களில் நடிப்பேனோ இல்லையோ இந்த கதாபாத்திரம் எனக்கு போதும்” 

என தெரிவித்துள்ள அமலா படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். அமலா பேசிய அந்த வீடியோ இதோ...