ஸ்ரீபெரும்புதூர் பெண் ஊழியர்கள் போராட்டம் ஆப்பிள் மற்றும் அதன் சப்ளையரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது. இது வெறும் தொடக்கம் தான் என்றாலும் கூட பெண்கள் போராட்டத்தாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

APPLE PRODUCTS

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் மிகப் பெரிய செல்போன் தொழிற்சாலை அமைந்துள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தொழிற்சாலையில் தான் ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.  கடந்த 2019 முதல் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்த ஆலையில் ஐபோன்ககளை உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் போவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அப்போது அறிவித்திருந்தது. இந்தத் தொழிற்சாலையில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதார போர் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தி வருகிறது. அதேபோல கொரோனா பாதிப்பும் உற்பத்தியில் ஒரே நாட்டை நம்பி இருந்தால் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பெரு நிறுவனங்களுக்கு உணர்த்தியது .

மேலும் இதனால் பல நிறுவனங்களும் சீனாவுக்கு வெளியே தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்தத் திட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைக்கு முக்கியமானது. ஏனென்றால் இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய செல்போன் தொழிற்சாலைகளில் இது முதன்மையானது. இதனால் இந்த தொழிற்சாலையில் சுமார் 1 பில்லியன் டாலரை அடுத்த மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

தொழிற்சாலைகளை மேம்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும், அதில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலை குறித்து யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். இவர்களை நேரடியாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் எடுப்பதில்லை. மாறாக உள்ளூரில் ஒரு கான்டிராக்டரை வைத்து அதன் மூலமே இந்த பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த கான்டிராக்டர்கள் தான் பெண் ஊழியர்களின் தங்குமிடம் மற்றும் உணவுக்குப் பொறுப்பு.

இந்நிலையில் இந்த பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு உணவு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்து தரப்படுவதில்லை என்ற புகார்கள் உள்ளன. இது தொடர்பாகப் பல முறை புகார் அளித்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஊழியர்கள் விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவைச் சாப்பிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலான பெண்கள் குணமடைந்து விட்ட போதிலும் சில பெண்கள் மட்டும் விடுதி திரும்பாததால் சக ஊழியர்கள் பதற்றமடைந்தனர். இது தொடர்பாக விடுதி நிர்வாகமும் முறையாகப் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களுடன் வீடியோ காலில் பேசினர். மேலும் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உறுதியளித்தார். அதன் பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் பெண் ஊழியர்கள் தங்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது பெண்கள் மிக மோசமான நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

மேலும் தொடர்ந்து  தொழிலாளர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. இந்தச் சூழலில் ஸ்ரீபெரும்புதூர் ஆலை நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக்க மாற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் தங்கும் வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஆலையின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் வரை அனைத்து ஊழியர்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது . போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த டிச.18 முதல் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் நிற்காமல் ஆப்பிள் நிறுவனமும் இது தொடர்பாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆப்பிள், ஊழியர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களில் உள்ள வசதிகளை நேரில் ஆய்வு செய்யத் தணிக்கையாளர்களையும் அனுப்பியுள்ளது. சில இடங்களில் உள்ள தங்குமிட மற்றும் சாப்பாட்டு வசதிகள் திருப்திகரமாக இல்லை என்றும் ஆலை மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சப்ளையருடன்  இணைந்து நிலைமை மேம்படுத்தப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.