தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் சீயான் விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் மெகா ஹிட்டானது.

அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படம் சிறந்த வசனகர்த்தா-க்கான தமிழ்நாடு மாநில விருது பெற்றது. குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளை பெற்றதோடு தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்தது.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி சக்திவேல், வானம் கொட்டட்டும் படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து யார் இவர்கள், ரா ரா ராஜசேகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலாஜி சக்திவேல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள பொண்ணியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களின் தந்தை சக்தி வடிவேல் உடல் நலக்குறைவு காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும்  இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) காலமானார். அவருக்கு வயது 84. சென்னையில் உள்ள ராமாபுரத்தில் உள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேலின் வீட்டில் அவரது தந்தை சக்தி வடிவேலுவுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது. பாலாஜி சக்திவேலின் தந்தை மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.