“கொரோனா தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கொரோனா என்னும் கொடிய நோய், உலகம் முழுக்க உருமாறிக்கொண்டு வந்த நிலையில், மீண்டும் வேக எடுக்கத் தொடங்கி உள்ளன.

இதனால், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று திடீரென்று 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

அத்துடன், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார துறை கவலைத் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தான், தமிழகத்திலும் கொரோனா சற்று வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில், சென்னையில் 3 இடங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளதாக தமிழக சுகாதார துறை கூறியுள்ளது.

அதுவும், இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தற்போது 7 வது இடத்தில் இருக்கிறது.

அந்த பட்டியலின் படி, தமிழ்நாட்டில் தற்போது வரை 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தற்போது வரை சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் தான், தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சற்று முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன என்றும், கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, “தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்புகள் குறைவு என்றும், ஒமைக்ரான் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவர்கள் குறுகிய காலத்தில் நலம் பெற்று விடுகின்றனர்” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதறிடையே, “கொரோனா அறிகுறி இருந்தாலே எந்த தயக்கமும் இல்லாமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், சென்னையில் இன்று முதல் 25 ஆயிரும் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்” சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.