லைவ் வீடியோவில் தூக்க மாத்திரையை ஒவ்வொன்றாக விழுங்கி, தற்கொலைக்கு முயன்ற அரசு பெண் ஊழியரால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதுவும் சிவகங்கை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்சசி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகில் உள்ள இரும்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுதா என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த சூழலில் தான், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றம் செய்வது குறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் பஞ்சவர்ணம் என்பவரிடம், அங்கன்வாடி அரசு ஊழியர் சுதா பேச வந்திருக்கிறார். 

இந்த சந்திப்பின் போது, உயர் அதிகாரியான பஞ்சவர்ணம், சுதாவை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அரசு ஊழியர் சுதா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

குறிப்பாக, தான் தற்கொலை செய்யும் தூக்க மாத்திரைகள் சாப்பிடும் அந்த காட்சிகளை அப்படியே சமூக வலைத்தளங்களில் லைவ் சோவாக காட்டி இருக்கிறார். 

அப்படி வெளியிட்ட அந்த லைவ் வீடியோவில், “அழுதுகொண்டே பேசும் சுதா, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனக்கு என்ன பிரச்சனை என்பதையும் தெளிவாக” குறிப்பிடுகிறார்.

அதன் பிறகு, தான் வைத்திருந்த தூக்க மாத்திரைகள் அடங்கிய அட்டையை பிரித்து, அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, தண்ணீரும் குடித்துக்கொண்டு, தொடர்ந்து அழுகிறார்.

குறிப்பாக, அந்த வீடியோவில் பேசிய சுதா, “என் பேரு சுதா, காளையர்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் நான் வேலை செய்கிறேன். என்னை அவங்க என்னென்ன பாடுபடுத்தினாங்கன்னு எல்லாருக்குமே தெரியும். நான் நிறைய தடவை இது சம்பந்தமாக சங்கத்தில் புகார் சொல்லி இருக்கேன். இது குறித்து ஆட்சியரிடமும் மனு அளித்திருக்கிறேன். ஆனால், யாருமே எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அத்துடன், குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் பஞ்சவர்ணம், என்னை இப்படி பாடாய் படுத்திடுச்சு. இந்த மையத்தை இடமாற்றம் செய்ய முயற்சி செய்றேன். 

இந்தம்மா என்னை அலைய வெச்சிட்டே இருக்கு. இப்போ என்னை உருட்டி மிரட்டிறாங்க. எனக்கு வேற வழி தெரியல. இந்தம்மா படுத்தற பாட்டுக்கு, செத்தே போய்டலாம் என்று சொல்லிக்கொண்டே” அவர், மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கிறார். இப்படியாக, அந்த வீடியோ முடிகிறது.

இப்படியாக, ஒவ்வொரு மாத்திரையாக போட்டு அழுது கொண்டே மறுபடியும் பேசும் அரசு ஊழியர் சுதா, “என் பிரச்சனைக்கு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கல, சங்கமும் நடவடிக்கை எடுக்கல. அதனால், வேற வழி தெரியல எனக்கு” என்று முடிக்கிறார். 

இதனையடுத்து, தற்கொலை செய்ய அதிக மாத்திரைகளை சாப்பிட்ட சுதா, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விரைந்துச் சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அரசு ஊழியர் சுதா, தற்கொலை முயற்சியின் லைவ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.