தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Annadurai

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தன் வசிய குரலால் கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற கொள்கையை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா.

தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. இவர் 1909 ஜனவரி 14-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடைய இவர் ஒரு இதழாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகம் என்று தனிக் கட்சியை தொடங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின்னர் இந்திய அரசியல் தளத்தில் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்பதை முன்வைத்தவர். அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை" என்பதே அந்தப் பேச்சு. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா.

தமிழக அரசியலில் பிரதான ஆளுமையாக திகழ்ந்த இவர், முதல்வராக இருந்த போது கடந்த 1969 பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார். அண்ணாவின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அண்ணா மறைந்தாலும் அவரது புகழ் மறையவில்லை.. அவர் சொன்ன கருத்துக்களும் தமிழகத்தையும் தமிழக மக்களையும் விட்டு மறையவில்லை. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக கட்சியை நிறுவியவரும் இவரே ஆவார்.

இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினைத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.