வேளாண் சட்டத்தை ரத்து செய்ததது போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என  திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

dhaya

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில்  பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி  குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .


இந்நிலையில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 500 பொது மக்களுக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மழைக்கால நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் கூறியதாவது:
குஜராத்தில் புயல் வந்த போது கேட்காமலையே 1000 கோடி நிவாரண உதவியை பிரதமர் வழங்கினார். ஆனால் தமிழகத்தில் மழை பாதிப்பிற்கு நிவாரணம் கேட்ட பின்னரும்  ஆராய்ந்து பின்னர் தான் நிவாரணம் அறிவிப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்வார் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்தார்.

மேலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்த  மு.க ஸ்டாலின் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக திரும்பி பார்க்காமல் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காமல் இருந்த மத்திய அரசு இன்று வேளாண் சட்டம் தேவையில்லை என்று ரத்து செய்கிறது.பஞ்சாப் உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் தோல்வி வரும் என்ற அச்சத்தில் ரத்து செய்து இருக்கிறார்கள். இதே போல் தமிழகத்தில் ஒருமித்த குரலாக நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறோம் அதையும் செய்தால் மனதார பாராட்டுவோம் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்தார்.