ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திருப்பிய கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படத்தின் தொடர்ச்சியாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் தயாராகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முன்னணி கன்னட நடிகர் யாஷ் ராக்கியாக மிரட்டலான கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பிரமாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

வருகிற 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தோடு நடிகர் அமீர் கான் கதாநாயகனாக நடித்திருக்கும் லால் சிங் சத்தா திரைப்படமும் அதே நாளில் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்து வெளிவந்த FORREST GUMP படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள லால் சிங் சத்தா படத்தை அட்வைத் சந்தன் இயக்க, அமீர்கானுடன் இணைந்து கரீனாகபூர், நாகசைதன்யா, மோனா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌரவ தோற்றத்தில் ஷாரூக் கான், சல்மான் கான், மாதுரி தீக்ஷித், கஜோல் மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.