சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை கேப்டன் மகேந்திர சிங் தோனி வழங்கினார்.

2021 ஐபிஎல் 14 வது சீசனில் சொல்லி அடித்த தோனி தலைமையில் கர்ஜித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்கள், 4 வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று இந்த ஆண்டு சாதித்துக் காட்டியது. 

சென்னை அணியின் இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணியை வீழ்த்தியதோடு கடந்த 9 வருட தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொண்டார் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இப்படியாக, ஐபிஎல் கோப்பையை வெற்றி கோப்பையாக வென்று கர்ஜித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்களைச் சென்னை ரசிகர்கள், அப்போது கொண்டாடித் தீர்த்தனர்.

இந்த சூழலில் தான், சென்னை அணியின் வெற்றியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று, தன்னுடைய டிவிட்டரில் வாழ்த்துக்களையும் அப்போதே கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக குழு சார்பில் ஐபிஎல் கோப்பையைச் சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன், “டி20 உலக கோப்பை போட்டி முடிந்ததும், தோனி சென்னை வருவார் என்றும், தோனியின் கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஐபிஎல் கோப்பை வழங்கப்படும்” என்றும், தெரிவித்திருந்தார்.

மேலும், “முதலமைச்சர் தலைமையில் சென்னையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பாராட்டு விழா நடைபெறும்” என்றும், அவர் கூறினார்.

அதன்படியே, சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்பதற்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை, கேப்டன் மகேந்திர சிங் தோனி வழங்கி கௌரவித்தார்.

இதனையடுத்து, விழாவில் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “சிஎஸ்கே அணியின் முதுகெலும்பு தோனி என்றும், தலைசிறந்த கேப்டன் தோனி என்றும், கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள்” என்றும், தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக பேசிய கேப்டன் மகேந்திர சிங் தோனி, “சிஎஸ்கே சரியாக செயல்படாத போதும், ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள் என்றும், சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்றும், மனம் திறந்து பேசினார்.

மேலும், “சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகமாக கற்று கொடுத்துள்ளது என்றும், மாற்று அணி வீரர்களையும் சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள், அதுதான் அவர்களது சிறப்பு” என்றும், பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

குறிப்பாக, “எனது கடைசி போட்டி சென்னையில் தான் என நான் நம்புகிறேன்” என்றும், கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசியதும், அரங்கத்தில் ரசிகர்களின் ஆராவார சத்தம் பிரம்மாண்டமாய் ஒலித்தது.