கனமழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

மேலும் வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளாறு வெள்ளப்பெருக்கு

இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டம் தொழுதூரில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொழுதூர் அணையில் இருந்து 8,062 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி நிலவரப்படி தொழுதூர் அணைக்கட்டு வினாடிக்கு 8,062 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனை (8,062 கன அடி நீரை) அப்படியே வெளியேற்றி வருகின்றனர். தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால், வெளியேற்றுப்படும் நீரின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

இதன் காரணமாக வெள்ளாற்று இரு கரையோரம் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘அபாயத்தை அறியாமல் வெள்ளாற்றை  கடக்க கூடாது, ஆற்றங்கரையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது, தடுப்பணை அருகே ஆபத்தான முறையில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது, ஆற்றில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க கூடாது’ போன்ற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வைகை அணை வெள்ளப்பெருக்கு

தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கையுள்ள பகுதியில் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்தறையினர் கண்காணித்து வருகின்றனர். இதேபோல், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை முழு கொள்ளவை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 5,910 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வைகையாறு செல்லக்கூடிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்க வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல் விருதுநகர் அருகே அத்திகுளம் அணை திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்திகுளம் அணைக்கட்டின் மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், உலக்குடி,மானூர், ஆற்றுப்பகுதியில் தண்ணீர் வரத்து அதிமாகும்.எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக்குடி ஊராட்சி மன்றத்தலைவரின் உத்தரவின் பேரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.