“தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது” என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

“தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக-வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. 

EPS

அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,

ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை விடியா அரசு நிலைநாட்ட வேண்டும்” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பட்டாக்கத்திகளுடன் இளைஞர்கள் பிடிபட்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவையும் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமி என்ன சுகந்திர போராட்ட தியாகியா? அவரை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்திவிட முடியுமா? எடப்பாடி பழனிசாமி என்ன சாதனை படைத்துவிட்டார்.

வரப் போகிற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுகவுக்கு வர இருக்கிற இரண்டு இடங்களை இவர் உள்ளிட்ட 100, 150 பேருக்கு கட்சித் தலைமை தரவிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. அதனால்தான் இந்த சண்முகம் போன்ற ஆட்கள் எல்லாம் குதிக்கிறது, அராஜகம் பண்ணுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதிமுக அலுவலகம் உங்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல, அங்கே அராஜகம் பண்ணி எம்ஜிஆரும், அம்மாவும் கட்சியை இந்த நிலைக்கு வளர்க்கவில்லை. உங்கள் ஆட்டத்திற்கெல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். நீண்ட நாட்களுக்கு அராஜகம் வெற்றிபெறாது. அதிமுக அலுவலகம் ரவுடி ராஜ்ஜியம் நடத்த புரட்சித்தலைவரால் துவங்கப்படவில்லை.  எடப்பாடி பழனிசாமி ஒரு தலைவர் இல்லை என்று நிரூபிக்க இது ஒன்றே போதும்.

pugazhendhi

மேலும் சசிகலா நினைத்தால் மாவட்டச் செயலாளரை மாற்றலாம், ஒன்றியச் செயலாளரை மாற்றலாம். அவர்களுக்கு அதிமுகவில் அனைத்து விதமான அதிகாரங்களும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கு என்கிற காரணத்தால் சசிகலா அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். 

ஆனால், இவர்கள் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டுவேன் என்கிறார்கள். ஏற்கனவே கூட்டிய பொதுக்குழு முடிவே நீதிமன்றத்தில் இருக்கின்றபோது இவர்களின் இந்த முடிவு யாரையும் கட்டுப்படுத்தாது. இவர்களுக்குக் கட்சியை நடத்தவும் தெரியவில்லை, சட்டம் என்ன சொல்கிறது என்று புரிந்துகொள்ளும் அறிவும் இல்லை. 

அவர்கள் கைகளில்தான் அதிமுக சிக்கி சின்னாபின்னமாக உள்ளது. நான் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுகிறேன், மூத்த தலைவர்கள் யார் மீதாவது கைவைத்துப் பாருங்கள், அப்புறம் என்ன நடக்கிறது என்று. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்கள் எல்லாம் நிச்சயம் உள்ளே செல்வார்கள். ’ என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,
திமுக-வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல்,
அதிகார துஷ்பிரயோகம்,
சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல்,(1/3) pic.twitter.com/eOQyZvlLxj

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 25, 2021