“அதிமுகவை வழி காட்டுதல் குழு தான் வழி நடத்திச் செல்ல வேண்டும்” என்று, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தான், தமிழகம் முழுவதும் மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளன.

அதுவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற இருப்பதால், “இந்த முறை அதிமுகவின் வெற்றியைத் தக்க வைக்க வேண்டும்” என்ற அதிமுக எண்ணுகிறது. 

இதனால், வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காகவே இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமான, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், “நகர் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்” தொடர்பாகவே முக்கிய ஆலோசனை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில், புதிய அவைத்தலைவரை இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. 

அதிமுக செயற்குழு பொதுக்குழுக் கூட்டம், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர்களின் கருத்தும், இந்த கூட்டத்தில் கேட்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் “அதிமுக வழி காட்டுதல் குழுவைச் சீரமைக்க வேண்டும் என்றும், 11 பேர் எண்ணிக்கை கொண்ட குழுவை 18 ஆக இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும், வழி காட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்” என்றும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனால், அதிமுக செயற்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, “அதிமுகவை வழிகாட்டுதல் குழு தான் வழி நடத்திச் செல்ல வேண்டும்” என்று, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், இன்றைய செயற்குழு கூட்டத்தில் சிலர் “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைக் குழு தலைவராகவோ, அவைத்தலைவராகவே நியமிக்கலாம்” என்றும், கூறினார்கள். 

ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இன்றைய அதிமுக செயற்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கியமாக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் உள்ளிட்டோர் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “இலத்தூர் ஒன்றிய அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இலத்தூர் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும்” என்கிற பதாகையுடன் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.