காவல்பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.si

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக 56 வயதான பூமிநாதன் பணியாற்றி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆடுகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். 

இதனால்  ஆடு திருடர்களை துரத்தி சென்றபோது எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனை, மணிகண்டன் கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பிக்கள் சிவசுப்பிரமணியன், அருண்மொழி அரசு தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள், 2 துணை ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து  விசாரணையில் ஆடு திருடுபவர்களே பூமிநாதனை கொலை செய்ததும் அவர் மொபைல் போனில் கடைசியாக கொடுத்த தகவல் அடிப்படையிலும் துப்பு துலங்கியது.  இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே உள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 19 மற்றும் 9 - 14 வயதுடைய இரு சிறுவர்களை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

மேலும்  எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை கொலை செய்த மணிகண்டன் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், “கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டு சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். 

இந்நிலையில் காவல் ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் அவரது வீரதீரச் செயலைப் பாராட்டினார். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பூமிநாதனின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.