தமிழகத்தில் 84 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற கோபால்ட் 60 அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் மதுரை புதிய அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதுகு தண்டுவட காய படுக்கைப்புண் சிகிச்சை வார்டு தொடங்கி வைத்தார். 
பின்பு மதுரை அரசு மருத்தவமனையில் மாடித்தோட்ட வளாகம் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 19 பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்பு படிப்பதற்காக 64 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. 

தமிழக அரசு கல்லூரிகளில் 2676 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 13 ஆயிரத்து 832 இடங்களும் உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தப்படும். அடுத்தபடியாக பொதுப்பிரிவினருக்கு கவுன்சிலிங் தொடங்கும்.

தென் தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 0 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி அமைக்கப்பட்டு உள்ளது. இது தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. 

அதே போல எலும்பு தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும். மதுரையில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். 

tamil Nadu vaccine first doseஎலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, விபத்து காயம் ஆகிய அம்சங்களில் எலும்பு வங்கியின் பயன்பாடுகள் உதவியாக அமையும். இறந்தவர்களிடம் இருந்து 14 மணி நேரத்துக்குள் எலும்புகளை அகற்றி பதப்படுத்தி பத்திரப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 

இதன் மூலம் எலும்புகளை 5 ஆண்டுகள் வரை சேமித்து வைக்க முடியும். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செயற்கை கால்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு செயற்கை கால்கள் வேண்டும் என்றால் பெங்களூரு, கோவை செல்ல வேண்டி வரும். 

ஆனால் இன்றைக்கு மதுரையில் செயற்கை கால்கள் தயாரிப்பதற்கான பிரத்யேக பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக 3 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மையம் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நிர்வாக ரீதியாக மட்டுமன்றி சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழக அரசு மருத்தவமனைகளில் வேலைப்பார்க்கும் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

தற்காலிக ஊழியர்களுக்கு பணி இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மதுரையில் தடுப்பூசி போடுவது என்பது இயக்கமாகவே உருமாறி வருகிறது. 

தமிழகத்தில் 84 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். இரண்டு தவணையாக 55.1 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 37 மாவட்டங்களில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, மதுரை ஆகிய இடங்களில் தடுப்பூசி சதவீதம் குறைவாக உள்ளது.

மதுரையில் 77 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 41.85 சதவீதம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட்டுக்கொண்டு உள்ளனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 13 சதவீதம் இடைவெளி உள்ளது. தமிழகம் முழுவதும் வீடு தேடிச்சென்று தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மெகா முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு தயக்க நிலை ஏற்பட்டு உள்ளது வருத்தம் தருகிறது. 

tamil nadu vaccine

மதுரைக்காரர்கள் வீரம், விவேகம், அறிவு நிறைந்தவர்கள். அவர்கள் தடுப்பூசி விஷயத்திலும் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் வருகிற சனிக்கிழமை கிறிஸ்துமஸ் திருநாள். 

எனவே அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை முகாம் நடத்தப்படும். இதேபோல ஜனவரி 1-ந் தேதி சனிக்கிழமை. எனவே அன்றைக்கு பதில் மறு நாளான ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவல் உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா விதிமுறைகளை தமிழக முதல்வர் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 43 பேருக்கு மரபியல் மாற்றம் தொடர்பான நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை 98 பேருக்கும் அரசு தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பல்வேறு கடிதங்களை எழுதி உள்ளார். இங்கு 50 மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

11 மருத்துவக் கல்லூரிகளில் 1450 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. இந்த கல்லூரிகள் வருகிற 12-ந் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விருதுநகரில் எந்த இடத்தில் நிகழ்ச்சி நடக்கும் என்பது தொடர்பாக பிறகு அறிவிக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.