சிறந்த பொது சேவைக்கான ‘ஸ்கோச்’ அறக்கட்டளை விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘ஸ்கோச்’ அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த சேவைக்கான விருந்து வழங்கப்பட்டது. 
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தனேந்திர குமார், ‘ஸ்கோச்’ அறக்கட்டளை தலைவர் சமீர் கோச்சார் ஆகியோர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு விருதை வழங்கினர்.

இதுதொடர்பாக ஜெ.ராதாகிருஷ்ணன் விழாவில் கூறியதாவது:

“கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து, சுனாமியின் போது நாகப்பட்டினத்தில் மேற்கொண்ட சிறப்பான மீட்புப் பணிகளை பாராட்டி சிறந்த சேவைக்கான விருது வழங்கியுள்ளனர். 

சுனாமியின்போது நான் தஞ்சாவூரில் இருந்தேன். அப்போது மீட்பு பணிக்காக நாகப்பட்டினத்துக்கு என்னை அரசு அனுப்பியது. அதேபோல் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எனக்கு விருது பெற்றது மகிழ்ச்சியாக இருந்தாலும், நான் பணியாற்ற வாய்ப்பு அளித்தது அரசு தான்.

RADHAKRISHNAN

‘சவாலான காலகட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைப்பதையே விருதாக நினைக்க வேண்டும். விருதை நோக்கி பணி செய்யக் கூடாது’ என்று எனது தாயார் சொல்லியிருக்கிறார். 

இந்த விருது எனக்கு மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான கடைநிலை ஊழியர்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும்தான். அவர்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல் இந்த விருது சாத்தியமில்லை. இந்த விருதை அனைவருக்கும் சமர்ப்பித்து அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில்,

“பேரிடர் காலங்களின்போது பொது சேவையில் கடமையை தாண்டி பணி செய்ததற்காக ‘ஸ்கோச்’ பொது சேவை விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.

குறிப்பாக கொடூரமான கும்பகோணம் தீ விபத்து, நாகப்பட்டினத்தில் சுனாமி பேரலையில் சிக்கி 6,065 பேர் இறந்தபோது பேரிடர் சவால்களை எதிர்கொண்டது , தற்போது கொரோனா காலத்தில் ஆற்றிய தடுப்புப் பணிகளை வைத்து ‘ஸ்கோச்’ எனக்கு விருதுகளை வழங்கியதாக கூறியுள்ளது.

ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனேந்திர குமார் மற்றும் ‘ஸ்கோச்’ அறக்கட்டளை தலைவர் சமீர் கோச்சார் ஆகிய இருவரின் கைகளால் இந்த விருதை பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

பேரிடர் போன்ற சவாலான காலகட்டங்களில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த அரசாங்கத்திற்கு அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் இந்த விருது எனக்கானது மட்டும் அல்ல. 

பேரிடர் காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் என்னுடன் பணியாற்றிய அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்களுக்கே இந்த விருது சேரும். ஸ்கோச் குடும்பத்திற்கு நன்றி. 

எனது மனைவி கிருத்திகா மற்றும் மகன் அரவிந்த் ஆகியோருடன், இந்த நிகழ்ச்சியில் விருது பெற்ற அனைவரின் குடும்பங்களும் அந்த தருணத்தில் என்னுடன் இருந்ததுது எனக்கு  மகிழ்ச்சி அளித்தது. உண்மையில்  இந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி தீவிபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். 18 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. 

RADHAKRISHNAN

அந்த காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பணியாற்றினார். தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான நிவாரணங்களை வழங்கினார்.

அதுபோல 2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமி பேரலை தாக்கியபோது அவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அப்போது மக்கள் நிவாரணத்திற்காக அவர் இரவு பகலாக உழைத்த உழைப்பு, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.

தற்போது கொரோனா பரவல் தடுப்பு பணியில் நீண்ட நாட்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். இதில் அவரது பணி இரண்டு வெவ்வேறு ஆட்சிகளிலும் தொடர்வதே அதற்கு சான்றாக உள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ‘ஸ்கோச்’ விருது உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டவர்களை கண்டு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய பணிகளில் தங்களை அர்ப்பணித்து கடமையைத் தாண்டி பணியாற்றி சாதனை படைப்பவர்கள் இந்த விருதைப் பெற்று வருகின்றனர்.