மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

new year

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இனிமை சூழ்ந்து - இன்னல் அகன்று அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 சனவரி 1-ஆம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எனினும் கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதலமைச்சரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் கழகத்தின் உடன்பிறப்புகளாகிய நீங்களும் இருப்பதால் உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு புத்தாண்டு நாளான சனவரி 1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதி பூண்டுள்ளது. நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும் உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன் என முதலவர் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலையின் பெரும்தாக்கத்தில் தமிழ்நாடு தவித்த நேரத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று, அதனைத் திறம்படக் கட்டுப்படுத்தியதுபோல, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன். எனவே அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க கழகத் தொண்டர்களாகக் கடமைகளை மேற்கொள்ளுங்கள். அதுவே எனக்கு நீங்கள் வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசாகும்.10 ஆண்டுகளுக்குப் பிறகு கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும் இனி வரும் காலங்களும் கழகத்தின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன் என்று முதலவர் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.