மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ள சிலம்பரசன் இயக்குனர் ஓபெலி கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே மீண்டும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் சிலம்பரசன் இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சித்தார்த்தா நுண்ணி ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் கௌதம் மேனன்-சிலம்பரசன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சித்திக் நீரஜ் மாதவ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியை கௌதம் மேனன் இன்று அறிமுகப்படுத்தினார். பிரபல இளம் தெலுங்கு நடிகையான சித்தி இத்நானி  வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் வருகிற ஜனவரி 3 தேதி முதல் தொடங்கும் இறுதிகட்ட படப்பிடிப்பில்  இணைகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது அந்த போஸ்டர் இதோ…