தி.மு.க. ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி அ.தி.மு.க.  அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்த கடந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 17 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்படி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், தேனியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை சிலவற்றை மட்டும் சம்பிரதாயத்திற்காக தி.மு.க.வினர் நிறைவேற்றி உள்ளனர். கவர்ச்சியான பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.

ADMK PROTEST

ஒரு சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி விட்டு மற்ற வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றுவோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க. ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் இரவு ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று அத்துறையின் தலைவர்தெரிவித்து இருப்பது அதற்கு சான்றாக உள்ளது.

கலெக்ஷன், கமிஷன் ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு தி.மு.க. அரசு செயல்படுகிறது. விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யாத காரணத்தினால் தமிழக விவசாயிகள் கண்ணீர் விடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சாபம் தி.மு.க. அரசை சும்மா விடாது.

25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய வாக்குறுதியின்படி பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டு இருந்தாலும், டீசல் விலையை குறைக்காத காரணத்தினால் தமிழகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூபாய் 190-க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை இந்த ஆட்சி காலத்தில் சிமெண்ட் ரூபாய் 400-க்கு விற்கப்படுகிறது. அதேபோல கம்பி, மணல் போன்ற கட்டுமானப் பொருட்களும் பல மடங்கு விலை உயர்வு அடைந்துள்ளது.

தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தின்போது முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை ஆகியன உயர்த்தி வழங்குவதாக கூறினார்கள். மக்களுக்கு பயன் பெற்று வந்த அம்மா மருந்தகம் அம்மா உணவகம் ஆகியவற்றையும் மூடி வருவது நியாயம் தானா?

ADMK PROTEST

அ.தி.மு.க. தொண்டர்கள் மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போடுவது, காவல்துறையை ஏவி சோதனை நடத்துவது என எத்தகைய அச்சுறுத்தலையும் அ.தி.மு.க. சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளது.

சேலம் என்றால் அது அ.தி.மு.க.வின் கோட்டை. எம்.ஜி.ஆரின் காலத்திலும் சரி, ஜெயலலிதாவின் காலத்திலும் சரி, இப்போதும் சரி, சேலம் எப்போதும் அ.தி.மு.க.-வின் கோட்டை. அ.தி.மு.க-.வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. 

எங்களை யாராலும் அசைக்க முடியாது. ஏன் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்கமுடியாது. அ.தி.மு.க.வினரை பழிவாங்க நினைத்தால் அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். ரெய்டு நடத்தினால் நாங்கள் பயந்துவிடுவோமா? எங்கள் ரத்தத்தில் வீரம் ஊறியிருக்கிறது.

தி.மு.க. அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். அ.தி.மு.க.வினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. எதனையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். சென்னை கனமழையால் மிதந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைப்படத்தில் வருவதுபோல நடந்தார், போஸ் கொடுத்தார், டீ குடித்தார், பின்னர் போய்விட்டார்.

ADMK PROTEST

 'அம்மா' சிமெண்டை விலையை ஏற்றி 'வலிமை' சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள். வலிமை சிமெண்டாம், நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்டா கொடுத்தோம்?. இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் தி.மு.க. ஆட்சி இருக்கும். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அதனை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு எங்கள் ஆட்சியில் வழங்கியது போல் அடுத்த ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும்.

தி.மு.க. அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க பலமுறை குரல் கொடுத்தும் விடியாத அரசு செவி சாய்க்கவில்லை” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.