தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

corono

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, யார் எல்லாம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் யார் எல்லாம் வீட்டுத்தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் எனவும் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

மேலும் தமிழகத்தில் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமலும், அறிகுறிகள் தெரிந்து அல்லது கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்கள் முடிவுற்று எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் இருந்தால் வீட்டு தனிமையை நிறைவு செய்து கொள்ளலாம். கொரோனா சிகிச்சை மையங்களில் இருந்தும் வீடு திரும்பலாம். வீட்டு தனிமையை நிறைவு செய்தவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.