மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப்பணியை, சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

kalaigar libraryமதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். பின்னர் கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் என்ற பெயரில் அமைய உள்ள இந்த நூலகத்தில் 250 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ்தளம் அமைக்கப்படுகிறது. நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. அதன் மேல் தரைதளம் மற்றும் 6 மாடிகள் உட்பட 7 அடுக்குகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப்படுகிறது. மின்சார பயன்பாடு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டிடம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுகிறது.

மேலும் கட்டிடத்தில் 250 மற்றும் 200 பேர் அமரும் வகையில் 2 கூட்ட அறைகள் அமைக்கப்படுகிறது. நூலகத்தில் தமிழ் பிரிவு, ஆங்கிலப்பிரிவு, கலைஞர் பிரிவு மற்றும் குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரிவு உள்ளிட்ட 27 பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் கட்டப்படுகிறது. 7 மாடிகளும் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. நூலகத்தின் முகப்பு பகுதியில் கருணாநிதியின் வெண்கல சிலை வைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. சர்வதேச தரத்திலான நூலகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு அமைக்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமரா வசதி, ஒளி-ஒலி அமைப்புகளுடன் சிறிய அளவிலான அறைகள், குழந்தைகளுக்கான பிரிவுகள் வருகின்றன.

தமிழ், ஆங்கிலம், ஆன்மிகம் குறிப்பாக சைவம், வைணவம், சங்க இலக்கியம், மொழியியல், வாழ்க்கை சமூகம், அறிவியியல், ஆய்வு மாணவர்களுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு, விருது பெற்றவர்களுக்கான நூல்கள், குடிமைப்பணிகளுக்கான நூல்கள், மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள தேவையான புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்க தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், வேலைவாய்ப்புக்கான நூல்கள் உள்பட 2.5 லட்சம் நூல்கள் வைக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும் ஒளி-ஒலி காட்சி கூடம், டிஜிட்டல் அறைகள் போன்றவை சர்வதேச தரத்தில் அமைகிறது. நூலகத்திற்கான கட்டுமானப்பணிகளை சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமானப்பணிகளை நேரலையில் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் நூலகம் அமைய உள்ள இடத்தில் மின்சார விளக்குகள், அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மற்றும் நூறு தொழிலாளர்களுடன் பொதுப்பணித்துறையின் மதுரை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டியதும், கடைக்கால் தோண்டும் பணி தீவிரமாக நடக்கும். பணிகள் 24 மணிநேரமும் நடந்து ஒப்பந்தக்காலமான 12 மாதத்தில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. கலைஞர் நினைவு நூலகம் மதுரையின் புகழுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழும் என்பதில் ஐயமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.