தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருக்கிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

omicron

சென்னை சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூடுதல் போலீஸ் கமிஷனர் டாக்டர் என்.கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இதுவரை நடைபெற்ற ஊரடங்கிலேயே 100 சதவீத வெற்றி என்ற வகையில் இந்த ஊரடங்கு அமைந்திருக்கிறது. தமிழகத்தில் தினசரி 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொற்று உயர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயரும் சூழல் நிலவுகிறது. எனவே பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தினசரி உறுதிப்படுத்தப்படும் தொற்றுகளின் எண்ணிக்கையில் 85 சதவீதம் ‘எஸ் ஜீன்’ குறைபாடாகவும் அதாவது ஒமைக்ரான் அறிகுறி, மீதமுள்ள 15 சதவீதம் டெல்டா வகை கொரோனாவாகவும் இருக்கிறது. அந்தவகையில் ‘எஸ் ஜீன்’ குறைபாடு கண்டறியப்பட்டு எந்த ஒரு அறிகுறியும் இல்லாதவர்களை 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைத்து மாநகராட்சி கண்காணித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  இணை நோயாளிகள் அதிக பாதிப்பு உடையவர்களை மட்டும் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை ‘எஸ் ஜீன்’ குறைபாடு கண்டறியப்பட்டவர்களில் பலர் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். தமிழகத்தில் ‘எஸ் ஜீன்’ குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இதுவரை 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 22 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி, கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் சுமார் 500 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாதவர்கள். பொங்கலுக்கு முன்பு இன்னொரு ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்துவார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கேட்டறிந்து அவர் நடவடிக்கை எடுப்பார். ஊரடங்கை பொதுமக்கள் மத்தியில் திணித்து பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்தார். 

அதன் பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறைவான பாதிப்பு உடையவர்களை கொரோனா கவனிப்பு மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை தேவையில்லாத பட்சத்தில் நோயாளிகளை சேர்த்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தால் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தமிழகத்தில் 7 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.

அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 104 கட்டளை மையத்தை தொடர்புகொண்டு பேசலாம். கொரோனா பாதிப்பு எந்த வேகத்தில் ஏறுகிறதோ அதே வேகத்தில் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ககன்தீப் சிங் பேடி கூறுகையில் சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் முக கவசம் அணியாத 2 ஆயிரத்து 344 நபர்களிடம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.