முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முதன் முதலாக தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு, இந்தியாவிற்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது, மு.க.ஸ்டாலின் எதிர் கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2 வது தவனையை செலுத்திக்கொண்டார்.

தற்போது, மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் நிலையில், 'முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டதாக” மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார்.

அதாவது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை காவிரி மருத்துவமனையில் 2 வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாகவே, தமிழக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.  

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ்  எடுத்துக் கொண்டதாக” தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் என்றும், தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம், நம் நாட்டையும் காப்போம்” என்றும், அவர் பதிவிட்டு உள்ளார்.

அதாவது, தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக “60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அந்த வகையில், தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் 20.3 லட்சம் பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல், “சுகாதார பணியாளர்கள் 5.65 லட்சமும், முன்களப் பணியாளர்கள் 9.78 லட்சம் பேரும் தமிழ்நாட்டில் உள்ளனர். இப்படி மொத்தமாக தமிழகத்தைப் பொறுத்தவரை 35 லட்சத்து 46 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாக உள்ளதாக” கூறப்படுகிறது.