தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், பள்ளிகளுக்கும் - கல்லூரிகளுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரஸ், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா 3 வது அலை வேகமாக வீசிக்கொண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த விடுமுறையும் தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, “தமிழகத்தில் ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடைபெறும்” என்றும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.

ஆனால், “பொதுத் தேர்வு நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், இந்த வகுப்பு மாணவர்களுக்கு எப்போதும் போல் நேரடி வகுப்புகள் நடைபெறும்” என்றும், தமிழக பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. 

அந்த வகையில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலமாக தற்போது படித்து வருகின்றனர்.

அதே போல், “தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட  கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக” உயர் கல்வித் துறை அறிவித்து உள்ளது. 

குறிப்பாக, “இந்த அறிவிப்பை மீறி கல்லூரிகள் செயல்பட்டால், அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “கல்லூரி மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு, ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் தேர்வு தள்ளிப்போய் உள்ளது” என்றும், கூறியுள்ளார். 

மேலும், “இந்த தேர்வுக்கான தேதி, ஒரு வாரத்திற்கு முன்பாகவே அறிவிக்கப்படும்” என்றும், அவர் தெளிவுபடத் தெரிவித்து உள்ளார்.

முக்கியமாக, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.