தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

curfew கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வேகமாக பரவுவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் கட்டுப்பாடுகளும் கடுமையாக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும் மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும் இதனால் பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து வந்ததால், கடந்த 6-ம்  தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இம்மாதம் இறுதிவரை நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு, கொரோனா பரவலின் வேகத்தை பொறுத்து ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.