தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் M.முத்துராமன். தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர் கோட்டையூர் அழகப்பச் செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த “மகனே கேள்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த தயாரிப்பாளர் M.முத்துராமன் ஆரம்பக்கட்டத்தில் இயக்குனர் முக்தா .V.சீனிவாசனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளராக களமிறங்கிய M.முத்துராமன் தனது ராஜவேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பழம்பெரும் நடிகர்களான ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சோ, வெண்ணிற ஆடை நிர்மலா, மனோரமா ஆகியோர் இணைந்து நடித்த “பேரப்பிள்ளை” திரைப்படத்தை தயாரித்தார். ரசிகர்கள் மத்தியில் பேரப்பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைய தொடர்ந்து “மிஸ்டர் சம்பத்” திரைப்படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார்.

தனது பல்லவி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பிலும் திரைப்படங்களை தயாரித்து வந்த M.முத்துராமன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த “ஆயிரம் ஜென்மங்கள்” திரைப்படத்தையும் தயாரித்தார் . இவரது தயாரிப்பில் வெளிவந்த ஒரு வீடு ஒரு உலகம் திரைப்படம் தமிழக அரசின் மாநில விருதை பெற்றது. 

மேலும் “உங்க வீட்டுப் பிள்ளை”, “மூடு மந்திரம்”, “ராஜமரியாதை”, “நெஞ்சில் ஒரு முள்”, “எடுப்பார் கைப் பிள்ளை”, “பெருமை” உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ள M.முத்துராமன் அவர்கள், இளைய திலகம் பிரபு முதல்முறை தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான “நலந்தானா” திரைப்படத்தையும் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து தயாரிப்பாளராகவும் பட அதிபராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்த தயாரிப்பாளர் M.முத்துராமன் தற்போது காலமானார்.பிரபல தயாரிப்பாளர் M.முத்துராமனின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தயாரிப்பாளர் M.முத்துராமனின் இறுதிச் சடங்குகள் இன்று (ஜனவரி 11) மதியம் சென்னை தியாகராய நகரில் நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் M.முத்துராமன் அவர்களின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.