தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ரைசா வில்சன். நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடிகை கஜோலின் உதவியாளராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த வர்மா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரைசா வில்சன் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் F.I.R படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் தி சேஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரைசா வில்சன் ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் காதலிக்க யாருமில்லை மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரைசா வில்சனுக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ரைசா வில்சன் தற்போது 2-வது முறையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில், 

2-வது முறையாக கோவிட் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது! 
2 தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட போதும், அதிகப்படியான தலைவலி, உடல் வலி, சளி, தொண்டை கரகரப்பு, காய்ச்சல் என நிறைய அறிகுறிகளோடு சென்னையில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் நம்மை சுற்றி இருக்கும் என்று தெரியவில்லை… அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முக கவசம் அணியுங்கள்!
 

என ரைசா வில்சன் தெரிவித்துள்ளார். நடிகை ரைசா வில்சன் விரைவில் மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.
actress raiza wilson tested positive for covid again with more symptoms