நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் என மிரட்டல் விடுத்த பாமக மாவட்ட செயலாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய “ஜெய்பீம்” திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன், “ஜெய்பீம்” திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின் புலத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் அடையாளம் இடம் பெற்று இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. 

இதைத் தொடர்ந்து, படத்திலிருந்து அந்த காட்சிகள் நேற்று முன் தினம் இரவே நீக்கப்பட்டது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நடிகர் சூர்யாவுக்கு தொடர்ந்து மிக கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

அதாவது, சமூகத்தின் விளிம்பில் இருக்கும் இருளர் இன மக்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக பெரும்பான்மையானான மக்கள் நடிகர் சூர்யாவுக்கும், அந்த படக்குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால், இந்த படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு காட்சியை மட்டும் பிடித்துக்கொண்டு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரும், அந்த சமுதாயம் சார்ந்த கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை முன் வைத்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதில், “அடுத்த படம் தியேட்டரில் வெளியானால் அசாம்பாவிதங்கள் நடக்கும்” என்று, மறைமுகமாக எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார். 

இவற்றுடன், வன்னியர் சங்கம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நடிகர் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருந்தது.

அதே போல், மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுப்படுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்” என்றும், அறிவித்திருந்தார். 

“இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது” என்றும், அவர் காட்டாக பேசியிருந்தார். 

மிக முக்கியமாக, “இனி சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்” என்றும், மிக கடுமையாக மிரட்டியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனால், தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்து, இது தொடர்பாக கண்டன குரல்களையும் பலரும் எழுப்பினர். முக்கியமாக, நெட்டிசன்கள் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கி, தரைகுறைவாக பேசியவர்களுக்கு எதிராக வார்த்தை யுத்தம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், மிரட்டல் விடுத்த பாமக மாவட்ட செயலாளர் மீது திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் நிர்வாகிகள், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் தான், “நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இவற்றுடன், சம்மந்தபட்ட பாமக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இது, சக பாமகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.