குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரை இருப்பதாக வெளியான வைரல் வீடியோவை தொடர்ந்து, பூவிருந்தமல்லியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கடந்த சில மாதங்களாக கடைகளில் வாங்கி உண்ணும் திண்பண்டம் மற்றும் குளிர்பானங்களால் சிலர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறக்கும் நிலை நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக, உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படமே எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் சூழலில், சென்னை திருவள்ளூரில் சில கடைகளில் சிறுவர்கள் உண்ணும் கேக்கில் இரண்டு போதை மாத்திரைகள் இருப்பதாகவும், இதனை உட்கொண்டால் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

c1

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள திண்பண்டங்களை மொத்தமாக விற்கும் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த கடைகளில் கேக்குகளை பிரித்து கலப்படம் மற்றும் மாத்திரை உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். 

ஆய்வுக்குப் பின், ‘சம்பந்தப்பட்ட கேக் வந்தால், அதை எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ எனவும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

c5

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கடையில் விற்பனை செய்த கோலிசோடாவில் துர்நாற்றம் வீசியதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (31). நேற்று உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையம் வளாகத்தில் உள்ள ஒரு கடையில் கோலிசோடா வாங்கி குடித்துள்ளார். அப்போது, கோலிசோடாவில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகுமார் எஸ்பினேடு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையிலான குழு, புகார் எழுந்த கடைக்கு சென்று ஏழு பிளேவர் சோடா மாதிரியை எடுத்து கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கடையில் விற்பனைக்கு இருந்த அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பரிசோதனை முடிவு வந்தால்தான் என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.