“ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் தகர்க்க முடியவில்லை” என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வருத்தமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளது, பேசும் பொருளமாக மாறி உள்ளது.

கொல்கொத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜனவரி 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இப்படியாக, கடந்த 10 மாத காலம் விரைவாக பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அவர், மிகவும் நேர்மையான மற்றும் சார்பற்ற நீதிபதி என்றும் பெயர் எடுத்தார் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி.

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் இத்தகைய செயல்பாடு, வேகமாக வழக்குகளை பைசல் செய்தது மற்றும் பல முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்பு வழங்கியது என தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். 

அத்துடன், வரும் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில் இருந்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு அதிரடியாக மாற்றி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. 

அதே நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனேஷ்வர் பந்தாரியை நியமனம் செய்தது. 

இந்த இரு பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு தலைவரால் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான், “நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை திடீரென 5 நீதிபதிகள் கொண்ட சிறிய மாநிலத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், உடனடியாக மாற்றவேண்டிய அவசியம் ஏன்?” என்றும், வழக்கறிஞர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, “சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா உள்ளிட்ட 5 நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பினார்கள். 

அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி பானர்ஜி எதுவும் சொல்லாமல் மாறுதலை ஏற்றுக்கொண்டார். 

ஆனாலும், இன்று காலை திடீரென தலைமை நீதிபதி யாரிடம் சொல்லாமல் குடும்பத்துடன் சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கொத்தா சென்றார். முக்கியமாக, பிரிவு உபச்சார விழாவையும் அவர் முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

இந்த நிலையில் தான், கொல்கொத்தா செல்லும் முன்பாக தனது சக நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை தலைமை நீதிபதி மிகவும் வருத்தமாக எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள், என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது இல்லை. அது உயர் நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே. என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், “மிகவும் திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி. இதே போல வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும். தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

குறிப்பாக, “இது நாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெரிய என்னால் இயலவில்லை” என்றும், அவர் வருத்தமாகவே சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டுக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்” என்றும், அவர் தனது கடிதத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.

இதனிடையே, “75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, கடந்த 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2 நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மாற்றுவது குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.