பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஓடாக்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், மனநிலை சரியில்லாத தங்களது குழந்தையை அழைத்துக்கொண்டு, அங்குள்ள ஒரு மந்திரவாதியிடம் காண்பித்துக் குணப்படுத்துமாறு கேட்டு உள்ளனர். 

அப்போது, தன்னுடைய அதீத மாந்திரத்தின் மூலமாக இந்த நோயைச் சரிசெய்து விடுவதாக அவர் நம்பிக்கை அளித்திருக்கிறார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரும், அந்த மந்திரவாதியை முழுவதும் நம்பி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த மந்திரவாதி கூறியபடி அந்த சிறுமியின் பெற்றோரும் நடந்துகொண்டனர். 

இந்த நிலையில் தான், அந்த மந்திரவாதி அங்குள்ள பெண்களிடம் திடீரென்று தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

இந்த செயலால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியிடம் சென்ற பெண்கள், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதனால், அந்த மந்திரவாதியும் அவர்களைப் பயமுறுத்தும் வகையில் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இன்னும் பயந்துபோன பாதிக்கப்பட்ட பெண்கள், அங்குள்ள ஒரத்தூர் காவல் நிலையத்தில், இந்த பாலியல் அத்து மீறில் குறித்து புகார் அளித்தனர். 

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், போலி மந்திரவாதியைக் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்தில் வைத்து, அந்த போலி மந்திரவாதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் சில பெண்களிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த போலி மந்திரவாதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருப்பணி வட்டாரம் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.