திருமணத்தை மீறிய உறவால், தாயின் கள்ளக் காதலனை மகன் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கும் கந்தம் பாளையம் அடுத்து உள்ள மயானம் பகுதியில் ஆண் சடலம் ஒன்று சாக்கு மூட்டையில் கட்டியபடி, அதுவும் அழுகிய நிலையில் கிடந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை வழக்கு குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உயிரிழந்தவர் பரமத்திவேலூரில் உள்ள சோழசிராமணி பகுதியில் இறைச்சிக் கடை வைத்திருந்த 36 வயதான சரவணன் என்பது தெரிய வந்தது. 

அத்துடன், சரவணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மகள்களும் இருப்பதும் தெரிய வந்தது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 36 வயதான சரவணன், தன்னை விட 8 வயது மூத்தப் பெண்ணான அங்குள்ள செட்டியாம்பாளையத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

அதே நேரத்தில், 44 வயதான கீதாவின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவர் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனையடுத்து, தன்னுடைய இளைய மகளை தமிழ்ச் செல்வன் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில், 19 வயதான மகன் இளவரசன் உடன் தனியாக வசித்து வந்து உள்ளார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மகன் இளவரசனுக்கு தன்னுடைய தாயின் கள்ளக் காதல் விசயம் தெரிய வந்தது. இதனால், கடும் ஆத்திரமடைந்த மகன் இளவரசன், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்த தாய் கீதா மற்றும் கள்ளக் காதலன் சரவணன் ஆகிய இருவரையும் பல முறை கண்டித்து எச்சரிக்கை விடுத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவில் குடிபோதையில் வந்த சரவணன், கீதாவின் வீட்டிற்குச் சென்று உள்ளார். அப்போது, கள்ளக் காதல் ஜோடி இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. 

இது குறித்து, தனது மகனிடம் கீதா கூறியுள்ளார். இதனால், இன்னும் ஆத்திரமடைந்த மகன் இளவரசன், சரவணனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். 

அப்போது, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றவே, கடும் ஆத்திரமடைந்த இளவரசன், சரவணனை சரமாரியாகத் தாக்கி உள்ளார்.

இந்த தாக்குதலில், தலையில் பலத்த காயமடைந்து சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனைச் சற்றும் எதிர் பார்க்காத தாய் கீதாவும், மகனும் இளவரசனும் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அதிர்ச்சியில் நின்று உள்ளனர். 

இதனையடுத்து, தனது மகளின் கணவர் தமிழ் செல்வனிடம் இந்த சம்பவம் குறித்து கூறி ஆலோசனை கேட்டு உள்ளனர். அதன் படி தமிழ்ச்செல்வனும், அவர் நண்பர் பிரபாகரனும் சம்பவ இடத்திற்கு ஆம்னி வேனில் வந்து, உயிரிழந்த சரவணனின் சடலத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி தூக்கிச் சென்று உள்ளனர்.

அதன் பிறகு, யாரும் அறியாத வகையில் அங்குள்ள கந்தம் பாளையத்தில் உள்ள ஆவாரங்காடு மயானம் அருகே சென்ற அங்கு இருந்த மழை நீர் சேகரிப்பு குட்டையில் அந்த சடலத்தை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

இதனையடுத்து, இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், சரவணனின் கொலை பின்னணியானது தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.