லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ஆனால் படக்குழு அதை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி தியேட்டரிகளில் வெளியாகும் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

படம் தயாராகி 10 மாதங்கள் ஆனபோதிலும் அதை ஓடிடியில் வெளியிடாமல் இருந்ததற்காக அவர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு தியேட்டர்களில் ரிலீஸாகும் மிகப் பெரிய படம் மாஸ்டர் என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

தற்போது மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB பிலிம்ஸ் நாளை மதியம் 12:30 மணிக்கு ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மூடில் இருக்கிறார்கள். மாஸ்டரை எல்லாம் ஓடிடியில் வெளியிடக் கூடாது, தியேட்டர்களில் பார்த்து ரசித்தால் தான் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் அவர்களின் ஆசையை படக்குழு நிறைவேற்றி வைத்துள்ளது.

முன்னதாக மாஸ்டர் ஓடிடியில் வெளியாகப் போகிறது என்கிற தகவல் வெளியாகி தீயாக பரவியது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். அதன் பிறகே விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். முதல்முறையாக விஜய் சேதுபதி, விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார், அதுவும் வில்லனாக. விஜய், விஜய் சேதுபதி மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்க்க தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகளில் கூறப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருப்பதால் நடிகர் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் உடனான இந்தச் சந்திப்பில் அமைச்சர் வேலுமணி, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் உடனிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தரப்பில் இதுவரை இச்சந்திப்பு நடந்ததை மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை என்பது கூடுதல் தகவல். 

கடந்த வாரம் மாஸ்டர் படத்தின் இந்தி டைட்டில் பற்றியும், இந்தி விநியோகம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது படக்குழு. விஜய் தி மாஸ்டர் என இந்தியில் தலைப்பிடப்பட்டுள்ளது. XB பிலிம்ஸுடன் இணைந்து B4U மோஷன் பிக்ஸ் என்ற நிறுவனம் இந்தியில் வெளியிடுகிறது.