தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் முக்கியமான நடன இயக்குனராக வலம் வருபவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. இவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ஹே சினாமிகா. இந்த படம் மூலம் ஜியோ ஸ்டுடியோஸ் தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைக்கிறது. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 12-ம் தேதி பூஜையுடன் துவங்கியது. அதன் பின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. 

பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். எடிட்டராக ராதா ஸ்ரீதர் மற்றும் கலை இயக்குனராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 

வாயை மூடி பேசவும் எனும் தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் துல்கருக்கென தனி இடமுண்டு. 

இந்த ஆண்டின் துவக்கத்தில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து அசத்தினார். இது துல்கரின் 25-வது படமாகும். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்தது. படத்தில் கெளதம் மேனன், ரித்து வர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

ஹே சினாமிகா படத்திற்கு பிறகு குரூப் என்ற படத்தில் நடித்துள்ளார் துல்கர். துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகியிருக்கிறது. ரெட்ரோ லுக்கில் துல்கர் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது இந்த படம்.