முதலமைச்சர் பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீரென சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ள நிலையில், மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

நடிகர் விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் “மாஸ்டர்“. இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். 

இவர்களுடன் முக்கிய காதபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம், கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், அப்போது வேகமாக பரவி வந்த கொரோனா காரணமாக, பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, விஜயின் “மாஸ்டர்” படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. 

மேலும், இந்த கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தி, இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட அதிரடியாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மற்ற 
மொழிக்கான டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கிய நிலையில், தற்போது அதனையும் முடித்து உள்ளது. 

அதன் படி, “மாஸ்டர்“ படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, நடிகர் விஜய் நடிக்கும் இந்த படம் தான், ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாவது இதுவே முதன் முறையாகும். இந்த படத்தின் இந்தி மொழி மாற்றத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வட இந்திய சினிமா வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை தற்போது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொது முடக்கம் இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் என்று பல படங்களில் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வருகின்றன.

முக்கியமாக, “மாஸ்டர்” படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது என்று கூறப்பட்டது. அதன் படி, ஜனவரி 13 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் விஜய் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். தற்போது தியேட்டரில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த சந்திப்பின் போது, நூறு சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு நடிகர் விஜய் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் விஜய்யுடன் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் உட்பட சிலரும் முதல்வரை சந்தித்து உள்ளனர். இந்த தகவல் வெளியே தெரிய வேண்டாம் 
என்பதற்காகவே அவர் ரகசியமாக முதல்வரை சந்தித்து உள்ளார் என்றும் தெரிகிறது. 

இதனிடையே, முதலமைச்சரை நடிகர் விஜய் திடீரென சந்தித்த விவகாரம், சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.